MALAR 4
https://youtu.be/x2pmiYJz09w
ஒன்றே குலம்
ஒருவனே தேவன்:
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன்இல்லை
நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைத்து உய்மின் 2104
Ontrae kulammum oruvanae thaevanum
nantRae
ninaimin naman-illai naaNaamae
sentRae
pukumkathi illai numsiththaththu
nintRae
nilaiypeRa neerninaiththu uymin
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். மாந்தர் குலம் முழுமையாகச்
சமுதாய வாழ்வில் ஒன்றுதான். ஒருநேர் ஒரேநிலை. மூல அணுவான இறையாற்றலும் ஒன்றேதான். எப்பொழுதும்
எல்லோருக்கும் நன்றே நினையுங்கள்; நல்லதே செய்யுங்கள்.
அதுவே இறவாப் புகழ் நிலைக்கு உயர்த்தும். வெட்காது நாம் துணிந்து செல்லும் வழி வேறில்லை. தடுமாற்றமின்றி அருளுணர்வோடு செயல்படுவோமாக.
ஞானமே வாழ்வு
நமது
நாட்டில் குறிப்பாக நம் தமிழ் நாடு தந்த மகான் திருவள்ளுவப் பெருமான் உலக மக்கள்
அனைவரும் முக்காலத்திலும் துன்பம் தவிர்த்து ஒளிமயமான வாழ்க்கையை ரசித்து ருசித்து
வாழ வேண்டிய அத்துனை வழி முறைகளையும் அறநெறிகளையும் சுருக்கமாக ஏழு ஏழு வார்த்தைகளில்
அழுத்தம் திருத்தமாக “திருக்குறள்” எனப் பெயரிட்டு அளித்துச் சென்றார். உலக மக்கள் எல்லோரும் போற்றும் பொது மறையாகப்
போற்றப்படுகிறது. நம் வாழ்வு மலர, மக்கள்
எல்லாச் செல்வங்களையும் பெற்று மாமனிதர்களாக வாழ எல்லா குறள்களையும் முழுமையாகக்
கற்று தெளிய வேண்டும் என்பதே இல்லை.
அவரவர் வாழ்வின் சூழ்நிலைக்கேற்ப விளக்கும் அடிகளைப் புரிந்து, கையாண்டு
நடந்தால் போதும். வாழ்வில் வெளிச்சம்
தோன்றி விடும். மக்களுக்கு இது புரிய
வேண்டும் என்றே ‘கல்வி’ என்ற ஒரு தனி அதிகாரம் அமைத்துத் தந்துள்ளார். கற்றோருக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு
என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
மனிதனின்
வாழ்வில் அவனும் அவனது மக்களும் சுகமாக, சுபிட்சமாக வாழ அவர்கள் செய்யும் ஒவ்வொரு
செயலும் (எண்ணம் உள்பட) அதைப் பற்றிய பூரணமான அறிதலும் ஞானமும் மிக மிக
அவசியம். எப்படிச் செயல்படுத்துவது என்ற
அறிவையும் திறனையும் அறிந்து செயல்பட்டாலொழிய வெற்றி காண முடியாது. மன நிறைவும், நிம்மதியும் வந்து அடையாது. உலகில் உள்ள எல்லா அம்சங்களைப் பற்றியும் ஞானம்
பெறத் தேவை இல்லை. வாழ்வாதாரத்துக்கு அவசியமானவை பற்றி முயன்று தேர்ந்தவர்கள்
சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தை அடைய முடியும்.
எதைப் பற்றியும் அச்சமின்றி எந்தவித இடர்ப்பாடும் இல்லாமல் நல்ல மனிதநேயப்
பண்புகளுடன் வாழ முடியும். இந்த வகையில்
நம் காலத்தில் வாழும் பல தியாக உள்ளம் படைத்த தலைவர்களை உதாரணமாக நம் மக்களுக்கு எடுத்துக்
காட்டலாம். இட்டார் பெரியோர் இடாதார் சிறியர்
என்றார் ஒளவை பாட்டி. எதைப் பற்றிய ஞானம்
அவசியம் என்பதை உணர்ந்து கற்றுத் தேறவேண்டும்.
கற்றபின் வள்ளுவப் பெருமான் கூறுவது போல் வாழ்வில் கடைப்பிடிக்க
வேண்டும். நாம் மற்றவர்களுக்குப் பயிற்சி
கொடுக்க வேண்டுமெனில் நாம் முதலில் அவைப் பற்றி நன்கு தெரிந்திருக்க
வேண்டும். இதையே வழிகாட்டுமுன் வாழ்ந்து
காட்டு என்றனர்.
இதை உணர வைப்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச்
சொல்வார்கள். ஒரு ஊரில் ஒரு மதபோதகர்
பிரசாரங்கள் செய்து வந்தாராம். பெரிய
ஞானி. புராணம் இதிகாசங்கள் முதலியவற்றைக்
கரைத்துக் குடித்தவர். சமூகத்தினரால் பெரிதும் பாராட்டுப் பெற்றவர். தினம் வெளியூர்களுக்குப் போக பக்கத்தில் ஓடும்
ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும். அவருக்கு
தினம் ஒரு படகோட்டி மற்றவர்களுடன் இவரையும் ஜாக்கிரதையாய் தோனியில் ஏற்றிச் சென்று
மறு கரையில் இறக்கி விடுவான். ஒரு நாள்
பயணம் செய்த போது அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து தண்ணீர் வேகமாக வந்து
கொண்டிருந்தது. எப்பொழுதும் போல் மக்கள்
ஏறினர். நமது போதகர் ஐயாவும் ஏறிக் கொண்டார்.
படகோட்டி மிகவும் கவனமாகவும் பொறுப்புடன் தண்ணீர் வேகத்தை
எதிர்த்து அக்கறையுடன் ஓட்டிக் கொண்டிருந்தான்.
போதகப் பெரியவர் மற்றவர்கள் எதிரில் படகோட்டியைக் கிண்டலாகச் சில கேள்விகளைக்
கேட்டுக் கொண்டே வந்தார். படகோட்டி அதிகம்
படித்தவன் இல்லை. ஆனால் நல்ல ஆரோக்யமும் அனுபவமும் உள்ளவன். சில கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. அவனிடம் இராமாயணம் படித்திருக்கிறாயா எனக்
கேட்டார். அதற்கு அவன் தெரியாது சாமி
என்றான். உடனே பெரியவர் அப்போ உன்
கால்வாசி ஆயுள் முடிந்தது என்றார்.
மகாபாரதமாவது கற்றுத் தெரிந்திருக்கிறாயா? எனக் கேட்டார். இதற்கும் படகோட்டி முழித்தான். எல்லோர் எதிரிலும் ரொம்பவும் வெட்கப்பட்டுக்
கொண்டு என்ன செய்வது சாமி. இதற்கும் கொடுத்து வைக்கவில்லை. ஒன்றுமே தெரியாது என்றான். இதைக் கேட்டதும் பெரியவர் சரியாய்ப் போச்சு. உன் பாதி ஆயுள் முடிந்தது. எப்படி வாழப் போகிறாய் என்றார். எல்லோருக்கும் கேட்கும்படி உரக்கச்
சொன்னார். பேசாமல் படகோட்டி அவன் வேலையைத்
தொடர்ந்தான். சற்று நேரத்தில் ஆற்றில் வெள்ளம்
அதிகமாகி தோனி தத்தளித்தது. போதகர் உள்பட
அனைவரும் மிகவும் பயந்தனர். படகோட்டி
பெரியவரைப் பார்த்து ஏன் சாமி உங்களுக்கு நீச்சல் போடத் தெரியுமா என்றான். அவர் திகிலடைந்து எனக்கு நீச்சல் தெரியாதே கற்றுக் கொள்ளவில்லையே என்று அலறினார். படகோட்டி சொன்னான் தோனியிலும் ஓட்டை ஏற்பட்டு
தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்து விட்டது.
நீச்சல் தெரியாத உங்கள் முழு ஆயுளும் முடியப் போகிறதே சாமி என்றான். சொல்லி முடிப்பதற்குள் தோனி கவிழ்ந்தது. நீச்சல் தெரிந்தவர்கள் தப்பினர். நமது போதகர் ஐயா வாழ்வும் முடிந்தது.
நாமும் இந்த நமது அன்றாட
வாழ்விற்கு வேண்டிய, அவசியமான ஞானத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் கலந்து
நம்மிடம் உள்ள செய்திகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக
அமையட்டும் என இந்த ப்ளாக்கரை ஆரம்பிக்கிறோம்.
கற்றது கைம்மண் அளவு என்பது எப்பொழுதும் பொருந்தும், முற்றும் அறிந்தோர் என்றும் யாரும் இருக்க
முடியாது. இதில் பங்கேற்கும்
அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள். நம்
விருப்பம் என்னவெனில் அவசியமான ஞானத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில்
எடுத்து எழுதி பகிர்ந்து கொள்ள முயல்கிறோம்.
இது நல்ல பயனுள்ள வகையில் அமைய உங்களால் உதவ முடியும் என நம்புகிறோம். எனவே
தங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை, தலைப்புகளை,வாழ்விற்கான முக்கிய
அம்சங்களைப் பற்றிய செய்திகளை, தகவல்களைத் தெரிவிக்கவும்,அவற்றை மேலும்
தரமுள்ளதாகவும் மேம்படுத்தவும் ஆலோசனைகள் தெரிவித்தால், அக்கருத்துக்களையும்
அன்பர்களுக்குச் சேர்க்க முயல்லாம். சிறு
சிறு கட்டுரைகளாகவும் போட வாய்ப்பு அமைந்தால்,
போற்றி வரவேற்போம். இப்பொழுது இது
ஒரு ஆரம்பகட்ட சிறிய எளிய முயற்சி தான்.
தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறோம்.
நமது எல்லை, வரம்பு மிக மிகச் சிறியது. வாழ்க்கை, மனிதனின் இன்றைய வாழ்க்கை நிலை, உடல்
நலம், மன வளம், மன அமைதி, மன நிறைவு, வாழ்வின் குறிக்கோள், சுயநலம் குறைத்து
பொதுநலச் சேவை செய்தல், நோயற்ற வாழ்வு,
நோய் தவிர்த்தல், சக்தி, வளம் பெருக்குதல், மருந்தில்லா மருத்துவம், உணவே மருந்து,
எளிய நோய் தீர்க்கும் சிகிச்சை முறைகள், மாணவர்கள் செயல்திறன் மேம்பாட்டு உத்திகள்,
முறைகள், வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள், போன்ற அம்சங்களை சிறு சிறு கட்டுரைகளாகப் போட்டு கருத்துக்களைப்
பகிர்ந்து உதவலாம். வாழ்க வளமுடன்.
Comments
Post a Comment